கருடாழ்வார் :-
கருடாழ்வார் வழிபாட்டின் மூலம் மனப்பயம் அகலும். மட்டுமன்றி திருஷ்டி தோஷம் விலகவும் பிள்ளைகள் வெற்றிவாகை சூடவும் அருள் செய்வார் கருடபகவான்.
வைஷ்ணவ ஆசார்யர் அனந்த பத்மநாப சுவாமி கருட வழிபாட்டின் மகிமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அவரிடம் கருட வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்துக் கேட்டோம்.
“ ஸ்ரீராமர் காட்டுக்குச் செல்லும் முன் தன் தாயான கௌசல்யாதேவியை வணங்கினாராம். அப்போது கௌசல்யா தேவி, ‘ராமா, கருடன் அமிர்தக் கலசத்தைக் கொண்டுவர தேவலோகம் சென்றபோது, விநதை என்ன சொல்லி ஆசீர்வத்தாளோ... அந்த ஆசீர்வாதத்தையே உனக்கு அளிக்கிறேன்’ என்றாளாம்.
விநதையின் ஆசீர்வாதத்தால்தான் கருடன் தேவருலகுக்குள் நுழைந்து சகல எதிர்ப்புகளையும் ஜெயித்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து அன்னையின் அடிமைத்தளையை அறுத்தார். அதற்குப் பலமாக அமைந்தது விநதையின் ஆசீர்வாதம். அதுவே கருடனுக்கு தீர்க்க ஆயுளையும் வெற்றியையும் அருளியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தையே நான் உனக்குச் செய்கிறேன் என கௌசல்யை ராமபிரானிடம் சொன்னாள்.
நாமும் நம் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் செய்யும்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி ஆசீர்வாதம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் பிள்ளைகளுக்கு தீர்க்க ஆயுள் உண்டாகும். அவர்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றிகிட்டும்.
யந் மங்களம் சுபர்ணஸ்ய விநதா அகல்பயட்புரா|
அம்ருதம் ப்ரார்தயாநஸ்ய தத்தே பவது மங்களம் ||
கருடனையும் அவரின் தாய் விநதையையும் நினைவூட்டும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஆசி வழங்கும்போது, கருடனின் பரிபூரண அருள் நம் குழந்தைகளுக்குக் கிட்டும். அவர்கள் சகல சம்பத்துகளையும் பெற்று சுகமாக வாழ்வார்கள். எனவே அடுத்த முறை பிள்ளைகள் நம் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கும்போது தவறாமல் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஆசீர்வாதம் செய்வோம்” என்றார் அனந்த பத்மநாப சுவாமி.
கண் திருஷ்டி, சத்ரு பயம் போக்கும் கருட தரிசனம்!
இன்றைக்குப் பலருக்கும் பெரும் தொல்லையாக இருப்பது கண் திருஷ்டிதான். கருடனை வழிபட்டால் கண் திருஷ்டி தோஷம் உடனே நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் முற்றிலும் விலகும். சுவாமி வேதாந்த தேசிகர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இதற்கு நல்ல உதாரணமாகும்.
வேதாந்த தேசிகரின் புகழைக் கண்டு வெதும்பிய சிலர், அவரைக் கொல்ல ஒரு பாம்பாட்டியை ஏவினர். அந்தப் பாம்பாட்டி, ஏழுவிதமான பாம்புகளை சுவாமியை நோக்கி ஏவினார்.
இதை அறிந்த தேசிகர் சுவாமிகள், மந்திரங்களைச் சொல்லி ஏழு கோடுகளைத் தரையில் போட்டார். ஒவ்வொரு பாம்பும் அந்தக் கோடுகளைத் தாண்ட முடியாமல் தோற்றுத் திரும்பிச் சென்றன.
ஆனால் சங்கசூடன் என்னும் பாம்பு சக்தி வாய்ந்தது. அது மந்திரங்களுக்குக் கட்டுப் படாதது. ஏழு கோடுகளையும் தாண்டி வேதாந்த தேசிகரை நெருங்கியது. இதைக் கண்ட தேசிகர், கருடனை தியானித்து ‘கருட தண்டகம்’ பாடினார். அடுத்த கணம் கருடன் தோன்றி அந்தப் பாம்பைக் கவர்ந்து சென்றது.
கருட தண்டகம் பாடினால் விஷ ஜந்துக்களின் பிரச்னைகளில் இருந்து விடுபட லாம் என்பது நம்பிக்கை. மேலும், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு கருட தண்டகம் நல்ல மூச்சுப் பயிற்சியைக் கொடுத்து சுவாசத்தைச் சீராக்கும் என்பார்கள் பெரியோர்கள்.
Comments
Post a Comment