மூதேவி – யார்?
மூதேவி – யார்?
‘மூத்த தேவி’ எனும் சொல்லே மருவி ‘மூதேவி’ என்றாயிற்று. மூத்த தேவி என்பவள், சில இந்துதர்ம நூல்களில் குறிப்பிடப்படும் துர்தேவதை ஆவாள். இவளை தவ்வை, முகடி, மாமுகடி, மூத்ததேவி, தூமாவதி, காக்கைக்கொடியோள், ஜேஷ்டா எனப் பலப் பெயர்களில் குறிப்பிடுவர்.
மூத்த தேவி, ஸ்ரீ தேவியாகிய லக்ஷ்மிக்கு முன் தோன்றியவள். இதனாலே இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். இவளை லக்ஷ்மிதேவியின் அக்காள் (முதலில் தோன்றியவள் என்ற அடிப்படையில்) எனவும் குறிப்பிடுவார்கள். மூத்த தேவி அமங்கலம் மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றிற்கு உவமையாகக் காட்டப்படுகிறாள். இவளை ‘அலக்ஷ்மி’ என்றும் அழைப்பார்கள். இவள் துரதிர்ஷ்டத்திற்கு அதிபதி தேவதை ஆவாள்.
தென்னிந்தியாவில் மூத்த தேவி வழிபாடு ஒரு காலத்தில் பரவலாக இருந்துள்ளது. இன்றளவிலும் மூத்த தேவியின் சிலைகளை பழங்கால கோயில்களில் காணலாம். இவளை வழிபடுவதன் மூலமாக, தங்களின் இல்லங்களை அமங்கலங்கள் தீண்டாமல் பாதுகாக்கலாம் என அக்காலத்தில் மக்கள் நம்பினர்.
||| மூதேவியின் தோற்றம்
ஆகம நூல்கள் மூத்த தேவியின் தோற்றத்தைப் பற்றி விளக்குகின்றன. அவள் அகோரமான மற்றும் அலட்சணமான தோற்றத்தை உடையவள் என்றும், காக்கை கொடியினை ஏந்தியவள் என்றும் கூறப்படுகின்றாள். இதனாலே மூத்த தேவியை ‘காக்கைக் கொடியாள்’ என்றும் அழைப்பார்கள்.
||| மூதேவியின் வரலாறு
புராணக் கதைகள் மூத்த தேவியின் வரலாற்றைப் பற்றி விளக்குகின்றன. பத்ம புராணத்தின் படி, சுரர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி. அதன்பிறகு வெளிபட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி.
||| மூதேவி எங்கே குடியிருப்பாள்?
ஸ்ரீசூக்தம் உட்பட்ட இதர முக்கிய நூல்கள் அலக்ஷ்மியாகிய மூதேவி எங்கே குடியிருப்பாள் என்பதற்கு சில குறிப்புகளைத் தருகின்றன.
1. சண்டை சச்சரவுகள் நிறைந்த இல்லம்
2. பொய்யும் கடுமையான வார்த்தையும் பேசுபவரிடம்
3. தீமைகளும் கொடுமைகளும் செய்பவரிடம்
4. உடல்தூய்மை, மனத்தூய்மை, சுற்றுச்சூழல் தூய்மை, வாக்குத்தூய்மை மற்றும் செயல்தூய்மை ஆகிய ஐந்து வகை தூய்மைகளையும் கடைப்பிடிக்காதவரிடம்
5. பெரியவர்களை மதிக்காதவரிடம்
6. போலியான சாமியார்களிடம்
7. வழிபாடும் பூஜைகளும் இல்லாத இல்லத்தில்
8. சுயநலமிக்கவர்களிடம்
9. தானம், தயை, தன்னடக்கம் எனப்படும் (பிரம்மதேவர் உபதேசித்த) மூன்று பண்புகள் துளியும் இல்லாதவரிடம்
10. காமம், க்ரோதம், லோபம், மோகம், அஹங்காரம், மாத்ஸர்யம் ஆகிய அரிஷத்வர்கம் எனப்படும் ஆறுவகை தீயகுணங்கள் கொண்டிருப்பவரிடம்
||| திருக்குறளில் மூத்த தேவி
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
பொருள்: சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் ஸ்ரீதேவி தங்குவாள்.
||| ஸ்ரீதேவியும் மூதேவியும்
ஒரு தனிப்பட்ட நபரிடமும், ஒரு குடும்பத்திலும், ஒரு சமுதாயத்திலும், ஒரு நாட்டிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் காணப்படுகின்றன. அவை பொஸிட்டிவ் (நேர்மறை) மற்றும் நெகட்டிவ் (எதிர்மறை) ஆற்றல்களாக உருவெடுக்கின்றன. உதாரணமாக, ஒரு மனிதனிடம் காணப்படும் நல்ல குணங்கள், அவன் புரியும் நல்ல செயல்கள், அவன் பேசும் நல்ல வார்த்தைகள், அவன் எண்ணும் நல்ல எண்ணங்கள் ஆகியவை அவனிடமும் அவனைச் சார்ந்திருப்போரிடமும் பொஸிட்டிவ் ஆற்றல்களை ஏற்படுத்துகின்றன. ஒருவன் எவ்வளவு அதிகமாக நன்மைகள் நிறைந்தவனாக இருக்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவனால் பொஸிட்டிவ் ஆற்றல்களை ஏற்படுத்த இயலும். இவ்வாறு பொஸிட்டிவ் ஆற்றல்கள் நிறைந்த இடத்தில் நிறைவான மகிழ்ச்சியும், வெற்றியும், மங்கலமும் நிறைந்திருக்கும்.
அலக்ஷ்மியாகிய மூதேவி ஓர் எதிர்மறை ஆற்றல் (நெகட்டிவ் ஃபோர்ஸ்) ஆவாள். அத்தகைய எதிர்மறை ஆற்றல் அதிகமாக வெளிபடும் நபரால் அவருக்கும் அவரைச் சார்ந்திருப்போருக்கும் அமங்கலங்களும் கேடுகளும் உண்டாகும்.
தூய்மை, ஒழுக்கம், அடக்கம் மற்றும் சோம்பலின்மை ஆகியவை அலக்ஷ்மியாக மூதேவியை தவிர்த்து, லக்ஷ்மியாகிய ஸ்ரீதேவியை வரவேற்கும். தர்மநூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத’ (இயமம் மற்றும் நியமம்) ஆகியவைகளை அறிந்து அதனை உறுதியாக கடைப்பிடிப்பவர்களிடம் அலக்ஷ்மி நெருங்குவதில்லை.
ஓம்
Comments
Post a Comment