ஜோதிடத்தில் பஞ்ச பூத தத்துவம்.
ஜோதிடத்தில் பஞ்ச பூத தத்துவம்.
வேதத்தில் பஞ்ச பூதங்களை பற்றிய விஷயங்கள் நிறைய உள்ளது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் என்பவை பஞ்ச பூதம் என்பது நாம் அறிந்ததே. இதில் இந்த வரிசை முக்கிய இடம் பெறுகிறது.
இவ்வுலகில் கண் காது முதலியவைகளுக்குள் அகப்படும் விஷயங்கள் கொஞ்சந்தான். அகப்படாதவை அதிகமாக இருக்கின்றன. அவைகள் அநுமானப் பிரமாணத்தில் அகப்படும் என வேதம் சொல்கிறது.
வேதத்தில் இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களையும் பதார்த்தங்கள் என கூறுகின்றனர். பதார்த்தங்களை ஏழு விதமாகப் பிரித்திருக்கிறார்கள்.
ஏழு பதார்த்தங்களானது திரவியம், குணம், கர்மம், ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம், அபாவம் ( இல்லாதது) என்பவை ஆகும்.
இப்படி ஏழுவகை பதார்த்தமாக பிரித்த பிறகு ஒவ்வொரு பதார்த்தத்தையும் பலவகையாகப் பிரித்திருக்கிறார்கள். முதல் பதார்த்தமான திரவியம் என்பது ஒன்பது விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், காலம், திக்கு, ஆத்மா, மனது என்பவை திரவியத்தின் பிரிவுகள் ஆகும்.
இவைகளில் முதலில் சொல்லப்பட்ட ஐந்துமே பஞ்ச பூதங்கள் ஆகும். இவைகளுடன் மற்ற திரவியங்களான காலம் என்பது நேரம், நேற்று, இன்று, நாளை, வருஷம், யுகம் போன்றவைகளாகவும்,
திக்கு என்பது தேசம், அங்கே, இங்கே, மேலே, கீழே போன்றவைகளாகவும்,
ஆத்மா என்பது பரமாத்மா, ஜீவாத்மாகவும்,
இவற்றையெல்லாம் அறியக்கூடிய மணமாகவும் திரவியங்கள் 9ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஜோதிஷமே திரவியத்தினை அறிய பயன்படும் ஒரு சிறந்த உபாயம் ஆகும்.
ஜோதிஷத்தில் ஹோராவும், ஸம்ஹிதையும் இரு வேறு விஷயங்கள் என்பது நாம் அறிந்ததே. ஹோரா என்பது கிரஹங்கள், ராசிகள், பாவங்கள் இவற்றினை அடிப்படையாகவும்
ஸம்ஹிதா என்பது பொதுவாக நாள், திதி, நக்ஷத்திரம், யோகம், கரணம் போன்றவைகளை அடிப்படையாக கொண்டது ஆகும்.
பஞ்ச அங்கத்தினை பயன்படுத்தி நாம் ஹோராவில் சூட்சுமாக ஜோதிஷ பலன் பார்த்தாலும், ஸம்ஹிதையில் இதனை நேரிடையாகவே பயன்படுத்தி பலன் பார்க்கமுடியும். அதாவது ஹோராவில் திதியாகட்டும், நக்ஷத்திரமாகட்டும், யோகமாகட்டும் நாம் அவற்றினை கிரஹங்களாக, பாவங்களாக, ராசிகளாக கொண்டுதான்/ மாற்றிதான் பலன் பார்க்க வேண்டுமே தவிர நேரிடையாக பலன் பார்க்கமுடியாது. அதாவது நக்ஷத்திரங்கள் என்றால் நக்ஷத்திராதிபதி கிரஹங்களாக, பாவங்களாக,
திதி என்றால் திதி சூன்ய ராசிகளாக,
யோகம் என்றால் யோகி, அவயோகி கிரஹங்களாக கொண்டுதான் பலன் பார்க்கிறோம்.
அதாவது சூட்சும நிலையில் எந்த கிரஹம், பாவம், ராசி குறிகாட்டுகிறது என்பதனை பார்க்கிறோம்.
ஆனால் ஸம்ஹிதையில் பஞ்சாங்கத்தினை வைத்து நேரிடையாக பலன் பார்க்கமுடியும். உதாரணமாக கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி அன்று கிருத்திகை நட்சத்திரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதனை பொறுத்து அந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் என்பது ஸம்ஹிதையில் ஒரு விதி ஆகும். கிருத்திகை நக்ஷத்திரம் சிறிது நேரமே இருந்து ரோகிணி அதிகமாக இருந்தால் குறைவான மழையும், அல்லது கிருத்திகை நக்ஷத்திரம் சிறிது நேரமே இருந்து பரணி அதிகமாக இருந்தால் அதிகமான வெப்பமும் ஏற்படும் என்பது விதி. இங்கு ராசி, பாவம், கிரஹம் எதனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பஞ்சபூதம் என்பது ஜோதிஷத்தில் இருக்கக்கூடிய அத்தனைக்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இதுவே கிரஹங்கள், பாவங்கள், ராசிகளுக்கு சூட்சுமாய் இருக்கிறது.
கிரஹங்களில் சூரியன், செவ்வாய் நெருப்பாகவும்,
சந்திரன், சுக்கிரன் நீராகவும்,
புதன் நிலமாகவும்,
குரு ஆகாசமாகவும்,
சனி காற்றாகவும் இருக்கிறது.
ராசிகளை பொறுத்தவரை நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் மட்டுமே உள்ளது. ஆகாசம் ராசிக்கு கொடுக்கப்படவில்லை.
லோகாயத என்று அழைக்கக்கூடிய சார்வாக பிருஹஸ்பதிய சூத்திரத்தில் ஆகாசம் மற்ற நான்கு பூதங்களுடன் இணைந்திருக்கிறது எனக்கூறியுள்ளனர். ஆகாசத்தினை தனியே பூதமாக கொள்ளவில்லை. இதிலிருந்து வேதத்தில் பஞ்ச பூதம் என்று கூறியிருந்தாலும் சில இடங்களில் ஆகாசத்தினை மற்ற நான்குடன் இணைத்திருப்பதனை காணமுடிகிறது.
அதுபோல ஜோதிஷத்திலும் ராசிகள், பாவங்களுக்கு ஆகாச தத்துவம் கிடையாது.
ராசிகளில்
மேஷம், சிம்மம், தனுசு நெருப்பாகவும்,
ரிஷபம், கன்னி, மகரம் நிலமாகவும்,
மிதுனம், துலாம், கும்பம் காற்றாகவும்,
கடகம், விருச்சிகம், மீனம் நீராகவும் உள்ளது.
இது வர்க்க சக்கரங்களுக்கும் பொருந்தும்.
அதுபோல பாவங்களில்
1, 5, 9ம் பாவங்கள் நெருப்பாகவும் ,
2, 6, 10ம் பாவங்கள் நிலமாகவும்,
3, 7, 11ம் பாவங்கள் காற்றாகவும்,
4, 8, 12ம் பாவங்கள் நீராகவும் உள்ளது.
பஞ்ச அங்கங்களான கிழமை, திதி, நக்ஷத்திரம், யோகம், கரணம் போன்ற அத்தனையும் பஞ்ச பூதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கிழமை நெருப்பு தத்துவமாகவும்,
திதி நீர் தத்துவமாகவும்,
நக்ஷத்திரம் காற்று தத்துவமாகவும்,
யோகம் ஆகாச தத்துவமாகவும்,
கரணம் நில தத்துவமாகவும் உள்ளது.
இதில் ஒவ்வொன்றிலும் பஞ்ச பூத உட்பிரிவுகள் உள்ளன.
உதாரணமாக கிழமைகள் நெருப்பு தத்துவமாக இருந்தாலும்
ஞாயிறு, மற்றும் செவ்வாய் நெருப்பாகவும்,
திங்கள், வெள்ளி நீராகவும்,
புதன் நிலமாகவும்,
குரு ஆகாசமாகவும்,
சனி காற்றாகவும் இருக்கிறது.
இதனைப்போலவே திதி நீர் தத்துவமாக இருந்த போதிலும்,
பிரதமை, சஷ்டி, ஏகாதசி நீராகவும்,
துவிதியை, சப்தமி, துவாதசி நிலமாகவும்,
திருதியை, அஷ்டமி, திரயோதசி நெருப்பாகவும்,
சதுர்த்தி, நவமி, சதுர்தசி வாயுவாகவும்,
பஞ்சமி, தசமி, அமாவாஸ்யை/ பெளர்ணமி ஆகாசமாகவும் உள்ளது.
நக்ஷத்திரம் என்பது காற்று தத்துவமாக இருந்தாலும்
அசுவனி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம் நிலமாகவும்,
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் நீராகவும்,
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நெருப்பாகவும்,
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வாயுவாகவும்,
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகாசமாகவும் உள்ளது.
இவைகளை போலவே ஒவ்வொரு யோகமும், கரணமும் பஞ்ச பூதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
பஞ்ச அங்கத்தின் பலன் ஆனது பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே இருக்கிறது.
ஒருவர்பிறந்த பஞ்சஅங்கத்தின் பலன் ஆனது பஞ்ச பூதங்களின் அமைப்பினைபொறுத்து அமைகிறது.
இதனை வைத்து பலன் நன்மையா, தீமையா என தீர்மானிக்க நாம் பஞ்ச பூதங்களின் பகையினை அறியவேண்டும்.
பஞ்ச பூதத்தில் நெருப்பும், நீரும் மிகுந்த பகையாகவும்,
நிலமும், காற்றும் பகையாகவும் இருக்கிறது.
ஆகாசம் யாருடனும் பகை இல்லை.
பஞ்ச அங்கத்தில் ஏதேனும் இரண்டு
நெருப்பு, நீராக இருந்தாலோ
நிலம், காற்றாக இருந்தாலோ ஜாதகருக்கு நன்மை தருவதில்லை.
ஆகாசம் எதனுடன் சேர்ந்த பொழுதும் தீமை தருவதில்லை என்று கூறி ஸம்ஹிதையில் கூறப்பட்ட பல்வேறு விதிகளுக்கு இதுவே அடிப்படையாக இருக்கிறது .
Comments
Post a Comment