வளம் தரும் வாஸ்து…மரம் வெட்டுவதற்கு முன்…!!!

வளம் தரும் வாஸ்து…மரம் வெட்டுவதற்கு முன்…!!!

வீடு கட்டுமானத்துக்கான மரங்களைத் தேர்வு செய்வது மிக முக்கியமானது. மரம் வெட்டுவதற்கு சர்வ அதோமுக நட்சத்திரத்தில், சுபமான நேரத்தில் கெளதுபந்தனம் செய்தபிறகு புறப்பட வேண்டும். அப்போது நல்ல சகுனங்களையும், நிமித்தங்களை யும், மங்களகரமான ஓசைகளையும் முறையே கண்டும் கேட்டும் புறப்படுவது சிறப்பானது!

மேலும் கந்தம், மலர்கள், தூபங்கள், எள் மற்றும் வெல்லம் கலந்த சாதம், பாயசன்னம், போன்ற படையலுக்கு உரிய பொருட்களை வைத்து வனதேவதை களை வணங்கிய பிறகு, மற்ற தெய்வங்களையும் வழிபட்டுவிட்டு, பூதங்களுக்கு உரிய பலிகளைச் சமர்ப்பித்த பின்னர் மரங்களை வெட்டித் தயார் செய்யவேண்டும்.

மரம் வெட்டுவதற்கு முன்…

தேவையான மரத்தை தேர்வு செய்த பிறகு, மரம் வெட்டப்படவுள்ள இடத்தின் கிழக்கு திசையில் தர்ப்பைகளைப் பரப்பி (கிழக்கு என்பது ஒரு மரத்தின் முன் முகப் பகுதி), ஸ்தபதியானவர் தன்னுடைய வலது பக்கத்தில் கோடரியை வைத்தபடி இரவு உறங்கவேண்டும். மறுநாள் காலையில் அவர் கோடரியைப் பிடித்துக் கொண்டு, ‘அபிமந்திரனம்’ மந்திரத்தைக் கூறிப் பிரார்த்திக்க வேண்டும்.

”இந்த மரத்தில் உறைந்திருக்கும் பூதங்களும் தேவதைகளும் இந்த இடத்தைவிட்டுச் செல் லவேண்டும். ஹே மரங்களே… மறுபடியும் வளரும் சக்தியை சோமன் உங்களுக்கு அளிப்பாராக. பூமியின் புத்திரர்களாகத் திகழும் மரங்களே, எனது பணியை முடிக்க உதவுங்கள்…’ எனும் கருத்து கொண்ட அந்த மந்திரத்தைச் சொல்லி வணங்கி, கோடரியின் நுனியை பால், எண்ணெய், நெய் ஆகி யவற்றால் சுத்தம் செய்து வெட்டத் துவங்க வேண்டும்.

மரம் வெட்டும்போது கவனிக்க வேண்டியவை…

* தரையில் இருந்து ஒரு முழம் உயரத்துக்கு மேல் 3 இடங்களில் வெட்டவேண்டும். வெட்டுப்பட்ட இடத்தில் நீர் பெருகி கசிந்தால் வளமை உண்டாகும். பால் போன்று கசிந்தால் நல்ல குழந்தைகளுடன் குடும்பம் வளம்பெறும். ரத்தம் போன்று நீர் கசிந்தால், வீட்டுக்கு உரியவர் உயிர் இழப்பு உண்டாகும்; அந்த மரத்தைத் தவிர்க்க வேண்டும்.

* மரத்தை வெட்டும்போது மரம் முறிந்துவிழும் சத்தம் சிம்மம், புலி, யானை ஆகியவற்றின் சத்தத்துக்கு ஒப்பாக இருந்தால், அந்த மரம் நன்மை அளிக்கக் கூடியதாகும்.

* வெட்டப்பட்ட மரமானது வடக்கு அல்லது கிழக்கில்  சாயுமாறு வெட்டவேண்டும். இது நன்மை அளிக்கும். மற்ற திசைகளில் விழுவது போன்று வெட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.

* அதேபோல், வெட்டுப்பட்டு சாயும் மரம், அதன் அடிபாகத்தை விட்டுப் பிரியாமல், அந்த மரத்தின் மேல் பாகம், அருகில் உள்ள மரத்தின் மீது விழுந்து மரக்கிளைகள் உடைவது கூடாது. இதனால் கவலை, நோய், குழந்தை பேறு இன்மை உண்டாகிவிடும்.

* வெட்டுப்பட்ட மரம் மற்றொரு மரத்தின் மீது விழுந்து அந்த மரமும் அடிப்பகுதியில் முறிந்து விழுந்தால், இந்த இரண்டு மரங்களும் வணங்கத் தக்கவை ஆகும்.

விருட்ச வழிபாடு

பண்டைய தமிழர்கள் விருட்சங்களைப் போற்றி வழிபட்டுள்ளனர். தங்கள் முன்னோரை தெய்வமாக வணங்கியதுபோல், மரங்களையும் வணங்கியுள்ளனர்.

விருட்சத்தின் உச்சியில் பலவிதமான மருந்துப் பொருட்கள் கலந்த நீரால் அபிஷேகித்து, மரத்தில் தங்க ஊசியால் சிறு துளை செய்வார்கள். அதன் பிறகு, மரத்தின் உச்சிக் கிளையில் அரிசி மாவைத் தடவி, அதன் மீது துணியைச் சுற்றி கட்டுவார்கள். தொடர்ந்து, மரத்தின் கிளைகளில் பூமாலைகளைத் தொங்க விடுவார்கள். இந்தச் சடங்கை நடத்தும் நபருக்கும் அபிஷேகம் செய்வார்கள். மரத்துக்கு ஆராதனை முடிந்தபிறகு, ஏழைகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த வைபவத்தின்போது பூமித்தாய், வருணன் முதலான தெய்வங்களைக் குறித்த ஹோமங்களையும் செய்வார்கள்.

தற்காலத்தில், கட்டுமானத் தேவைகளுக்கான மரத்தாலான நிலைப்படிகள், சாளரச் சட்டங்கள் முதாலனவற்றை கடைகளிலேயே வாங்கிக் கொள் கிறார்கள். கடைகளில் கொள்முதல் செய்வதற்கும் நல்ல நாட்களைத் தேர்வு செய்வது விசேஷம்.

பஞ்சமி, சஷ்டி, சப்தமி ஆகிய திதிகளிலும், ரோகிணி நட்சத்திர நாளிலும் மரச் சாமான்களை வாங்கிப் பயன்படுத்துவது உத்தமம்.

அதேபோல், சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும்போதும், சந்திரன் திருவோணம், அவிட்டம், சித்திரை, சுவாதி ஆகிய நட்சத்திரத்தில் இருக்கும்போதும், சுக்கிரன் திருவோணம், அவிட்டம் 3 மற்றும் 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 3ம் பாதம்

ஆகியவற்றில் இருக்கும்போதும் மரம் வெட்டக்கூடாது. அதே போன்று இந்த வேளைகளில் நாட்களில் கட்டுமான மரப் பொருட்களை வாங்குவதும் கொண்டுவருவதும் கூடாது.

இனி, நிலத்தடி நீர் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்வோம். கட்டடம் எழும்புவதற்குத் தேவையான மூலப் பொருட்களில் தண்ணீர் மிக முக்கியமானது இல்லையா?!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரூற்றுகளைக் கண்டறிந்து செயல்பட்ட தகவல்களை கற்கோயில் சிற்பங்கள், ஓலைச் சுவடிகள் மூலம் அறியமுடிகிறது. பிருஹத் சாதகம் எனும் வடமொழி நூலில் நிலத்தடி நீர் பற்றிய விவரங்கள் உள்ளன.

மனதில் மிக ஆழமாகவும், விதியின் சூட்சுமமாகவும் மறைந்துள்ள விஷயங்களை ஜோதிடம் எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறதோ, அதுபோல் பூமியின் அடியில் நீர் இருக்கிறதா, எவ்வளவு ஆழத்தில் உள்ளது, என்ன சுவையில் இருக்கும், எந்த திசையில் அல்லது எந்த இடத்தில் நிலத்தடி நீர் உள்ளது, அதை எப்படி அடைவது என்பது குறித்த அரிய தகவல்களை கூபப் பிரஸ்னம் எனும் ஜோதிட ஆரூடம் தெளிவுபடுத்துகிறது.

இலங்கையில் முதலில் தமிழில் அச்சான நூல் கூப சாத்திரம் (புலவர் நவமணி சண்முகவேல்). கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள ‘பளயறை’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் 62,000 சுவடிகள் உள்ளன. அதில், கூபசாத்திரம் (கூபம் = கேணி அல்லது கிணறு) பற்றிய தகவல்கள் உள்ளன.  மேலும், தமிழில் சல்லியங்கள் (புதைந்துள்ள பொருட்கள்) பற்றிய சுவடிகளும் உள்ளன.

மய மதத்தில் மயன், ‘கிணறு வெட்டும் இடத்தைத் தேர்வு செய்து, உறுதி செய்யப்பட்ட இடத்தில் பூஜை செய்ய வேண்டும்’ என்கிறார். அவர், தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்பதை, தோண்டு வதற்கு முன்பாக அறிந்துகொள்ளும் நுட்பத்தை, ‘தொடு குறி’ என்ற பெயரில் விவரிக்கிறார்.

சிறுவன் ஒருவனை கிழக்கு நோக்கி நிற்கச் செய்யவேண்டும். மற்றொரு சிறுவனைக் கொண்டு முதலாமவனின் உடலைத் தொடச் சொல்ல வேண்டும். அப்போது இரண்டாவது சிறுவன் முதலாமவனின் தலை, தோள் மற்றும் உடலின் வடமேற்கு பாகத்தில் தொட்டால், அந்த இடத்தில் நிலத்துக்கு அடியில் 7 முழத்தில் தண்ணீர் உண்டு. அதேபோல் முகம், கண், தொடை ஆகியவற்றை தொட்டாலும் 7 முழ ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்.

கழுத்து, நெற்றி, வலது கால் ஆகிய இடங்களில் தொட்டால், 11 முழ ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். மார்பு, தென்கிழக்கு பாகங்களில் தொட்டால் அதிக ஆழம் தோண்ட வேண்டியது இருக்கும்.

விரல் மற்றும் உடலின் தென்கிழக்கு பாகங்களில் தொட்டால், 9 முழம் ஆழத்திலும், இடுப்பு, பாதம் ஆகிய பகுதிகளைத் தொட்டால் அந்த இடத்தில் நீர் இல்லை எனவும் அறியமுடியும் என்கிறார் மயன்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-