மனநிலை பாதிப்பு சிலருக்கு ஏற்படுவது ஏன்:-



 மன நிலை சிலருக்குப் பாதிக்கப்பட ஜோதிடப்படி எது காரணம் ஆகிறது?

நவ கிரகங்களில் மனதை ஆள்பவர் சந்திர பகவான் ஆவார். சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி ஆகும்.

இந்த உலகில் கோதுமை, வரகு, துவரை, பச்சை பயிறு, கொண்டைக்கடலை என எத்தனை தானியங்கள் இருந்தாலுமே கூட!...

 ஒருவருக்கு அரிசி மட்டுமே மன நிறைவைத் தர வல்லது. அதனால் தானோ... என்னமோ !... அரிசியை மனதை ஆளும் சந்திர பகவானுக்கு தானியமாக நாம் அளித்து உள்ளோம்.

மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் இரு வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது.

சந்திர தேவன் தனது கடும் தவத்தால் கிரக பதவியை அடைந்தார். தமிழகத்தில் சந்திரன் தவம் இருந்த திருத்தலம் திங்களூர் ஆகும்.

உளவியலில் சந்திர பகவான் : சந்திரன் முழு பலத்துடன் பூரணமாகக் காணப்படும் நேரம் பெளர்ணமி ஆகும். அந்த சமயம் பூமியில் ஈர்ப்பு விசை அதிக அளவில் காணப்படும். நல்ல மன நிலையில் இருப்பவர்கள் தெய்வ காரியங்களை அன்றைய தினத்தில் செய்யும் போது அவர்களது மன வலிமை அதிகரிக்கும். அதுவே எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் அதி வேகமாக செயல் படுவார்கள். பெளர்ணமியில் அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான காரியம். இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், ஆங்கிலத்தில் 'லுனாடிக்' என்ற ஒரு வார்த்தை ஒரு வகை மன நோயாளிகளை அழைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகவே "லூனார்" என்கிற வார்த்தை "சந்திரனை" குறிக்கும். இதன் மூலம் ஆங்கிலமும் கூட சந்திரனை "மனோகாரகன்" என்ற விதத்தில் தான் வரையறை செய்கிறது.

வேதங்களில் சந்திர பகவான் : வேதத்தில் புருஷ சூக்த மந்திரத்தில் சந்திரனை மனதுடனும் தொடர்புபடுத்தும் மந்திரம் உள்ளது. "சந்திரமா மனசோ ஜாத:, சக்ஷோர் சூர்யோ அஜாயத" என்று அந்த மந்திரமானது சொல்லப்படுகிறது. திதி, வாரம், நக்ஷத்திரம் என அனைத்துமே சந்திரனைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

ஜோதிடத்தில் சந்திரனுக்கு உரிய இடம் : பொதுவாகவே, ஒருவரின் மன நிலையை தீர்மானிக்கும் கிரஹம் சந்திர பகவான் ஆவார். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது. அதிலும், குறிப்பாக சந்திர பகவான் வர்கோத்தமம் ஆகிய நிலைகளை பெறும் சமயத்தில், ஜாதகர் பிறரது மனதை கவரும் குணத்தை இயல்பாகவே பெற்று விடுகிறார். பெளர்ணமி அல்லது வளர்பிறையில் சந்திரன் முழு சுப கிரகமாகக் காணப்படுவார். அதுவே, அமாவாசை அல்லது தேய்பிறையில் சந்திரன் முழு அசுபராகவே காணப்படுவார். இப்படியாகச் சந்திரன் இரு நிலைகளை ஜோதிடத்தில் அடைகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் காட்சி கொடுப்பவர். சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டில் சஞ்சரிப்பதையே நாம் சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் (மனம் தொடர்புடையவர்) என்பதால் இந்த நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் என அனைத்துமே உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் எந்த நிலையில் காணப்பட்டால் அவரது மனநிலை பாதிப்பு அடையக் கூடும்?!... வாருங்கள் அது பற்றி விரிவாகப் பார்ப்போம்...

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மறைவு ஸ்தானங்களில்... அதாவது லக்கினத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது அல்லது நிற்கும் பொழுது மனநிலை பாதிப்புகள் மற்றும் எதிர்மறை சிந்தனைகள் மனதில் அதிக அளவில் ஏற்படுகின்றது. இந்த பாதிப்பு வளர்பிறையை விட... தேய்பிறையில் அதிகம் காணப்படுகிறது.

இப்படியாக... மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல் அடைதல்... அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம் அடைதல், இல்லறத்தில் சண்டை இடுதல் போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் ஏற்படுகிறது.

மாந்திரீகமும், ஜாதகத்தில் சந்திரன் உள்ள நிலையும் : மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதை கட்டுபடுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. சந்திரன் பலமிழந்த நிலையில் தான் ஒருவரை மந்திரம், மாந்திரீக வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் என எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும். அதுவே சந்திரன் வர்க்க பலம் பெற்றாலோ, ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலோ... அவர்களை மனோ வசியம் செய்வது மிகக் கடினம். பில்லி - சூனியம் போன்ற விஷயங்கள் கூட சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டால் மட்டுமே பலிக்கும். அந்த வகையில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கிரகம் சந்திரன்.

சரி!... வாருங்கள் ஜோதிடத்தில் மன நோய்க்கான கிரஹ நிலைகள் பற்றிப் பார்ப்போம் : -

ஜோதிடத்தில் மன நோய்க்கான கிரஹ நிலைகள்: ஜோதிடத்தில் மனதிற்கு சந்திரனையும், புத்திசாலித்தனத்திற்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரஹங்களாக குறிப்பிடுகின்றனர். இந்த மூன்று கிரஹங்களும் நல்ல நிலையில் இணையும் போது மிகுந்த புத்திசாலிதனத்தையும் அவர்களில் ஒருவர் அசுபத்தன்மை பெற்றாலும் மன நிலையில் சின்னச், சின்ன பாதிப்புகளையும் உடன் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்துகிறது.

ஒருவருடைய மன நிலை மற்றும் புத்திசாலிதனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் பாவம் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். இந்த ஐந்தாம் இடம் கெடாமல் இருப்பது நல்ல மன நிலையை தரும். அதுவே, இந்த ஐந்தாம் இடம் பாதிக்கப்படுமாயின் ஜாதகருக்கு ஞாபக மறதி, கல்வியில் தடை, சந்ததி தாமதம் ஆகுதல் போன்ற சில தீய பலன்களைக் கூடத் தந்து விடும். அது மட்டும் அல்லாமல், ஐந்தாம் வீட்டில் அசுபத் தொடர்புகள் ஏற்படும் போது அது ஒருவரின் ஆழ் மனதினை அதிக அளவில் பாதிக்கின்றது. இவை தவிர, மனதை பாதிக்கும் மேலும் சில கிரக அமைப்புகள் பின்வருமாறு...

1. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது...

2. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் பலவீனம் அடைந்து 6,8,12 ஆகிய வீடுகளில் இருப்பது...

3. சந்திரன் விருச்சிக ராசியில் நீச்சம் அடைந்து உடன் கேது உடன் இணைந்து இருப்பது...

4. லக்னத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் சேர்ந்து நின்ற நிலையில் பலமிழந்த சந்திரனும் புதனும் சேர்க்கை பெற்று நிற்பது..

5. சந்திரனும் புதனும் 6/8/12 வீடுகளில் சேர்ந்து நின்று அவர்களூடன், செவ்வாய், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய அசுபர்களின் தொடர்பு பெறுவது...

6. பலமிழந்த சந்திரனோடு மாந்தி சேர்க்கை பெறுவது, அல்லது சந்திரனோடு சனி மற்றும் ராகு சேர்க்கை பெறுவது...

7. கோப உணர்ச்சியை தூண்டும் கிரகங்களான சூரியன், செவ்வாய், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சனி, பலவித ஃபோஃபியாக்களையும் தற்கொலை மனப்பான்மையையும் ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது ஆகிய கிரஹங்கள் மற்றும் மாந்தி சந்திரனோடு சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது... என மேற்கண்ட இவை தவிர...

சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திர பலம் குறைந்த தினங்கள் ஏழரை, அஷ்டம, அர்தாஷ்டம சனி காலங்கள், சந்திரன்/ சனி / ராகு தசாபுத்தி காலங்கள் சந்திர தசையில் கேது புத்தி காலம், சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள் போன்ற காலங்களில் ஒருவரது மனம் பேதலிக்கலாம் அல்லது அதிக அளவில் எதிர்மறை சிந்தனைகள் கூட ஏற்படலாம்.

இந்நிலையில் ஒருவர் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பின்வருமாறு : -

1. கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது போன்றவை மேற்கண்ட மனோ பாதிப்பில் இருந்து ஒருவரை காக்கும். மன வலிமையை அதிகரிக்கும்.

2. குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருக்கள் வழிபாட்டை ஒருவர் அவசியம் செய்ய வேண்டும். அதுவும் கூட ஒருவரை கிரக தோஷங்களில் இருந்து காக்க வல்லது.

3. ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை துளசி சாற்றி வழிபடுவது கூட நல்லது. குறிப்பாக, இது சந்திர தோஷத்தை போக்க வல்லது.

4. ராகு/ கேது ஸ்தலங்களான திருநாகேஸ்வரம், திருகீழப்பெரும் பள்ளம், திருப்பாம்புறம், கேரளாவில் உள்ள மண்ணார்சாலா ஆகிய ஸ்தலங்களில் ஸர்ப வழிபாடு செய்வது கூட மனதின் எதிர்மறை எண்ணங்களை குறைக்க வல்லது.

5. கும்பகோணதிற்கு அருகில் உள்ள திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க ஸ்வாமி கோயிலில் ஜென்ம நக்ஷத்திர நாளில் சென்று வழிபடுவது கூட சிறப்பு. இதுவும் கூட அதிக மனோ பலம் தரும். உடன் கிரக தோஷத்தையும் நீக்கும்.

6. திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசிலம் மற்றும் திருப்பதி போன்ற சந்திர ஸ்தலங்களுக்கு சென்று வருவதும் கூட சிறந்த பலனளிக்கும்.

7. இவை தவிர, உளவியல் ரீதியாக மனதை ஒருமுகப்படுத்தும் தியானப் பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.

8. ஏதேனும், ஒரு பெளர்ணமி தினத்தில்... சந்திரனுக்கு அதி தேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி போன்றவற்றை பாராயணம் செய்தல் சிறப்பு.

9. இவை தவிர, மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பது கூட சிறப்பான பலன்களை தரும். உடன் கிரக தோஷங்களை போக்கும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-