பிரண்டை மருத்துவ குணம்:-
பிரண்டை என்பது கொடி போல வளரும். இதன் தண்டுப் பகுதிதான் உண்பதற்கு ஏற்றதாகும். பிரண்டையில் பல வகை உண்டு. ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை களிப் பிரண்டை,சதுரப் பிரண்டை, முப்பிரண்டை, புளிப்பிரண்டை, செம்பிரண்டை, தீம்பிரண்டை எனப் பல வகை உண்டு. இவற்றின் குணம் ஏறக்குறைய ஒன்றுதான்.இதில் முப்பிரண்டை கிடைப்பது அரிது.எளிதில் கிடைக்கக் கூடியது சதுரப் பிரண்டை ஆகும்.இதில் ஆண் ,பெண் என இரு வகை உள்ளது.ஆண் பிரண்டை சுமார் இரண்டு மூன்று அங்குலத்திற்கு ஒரு கணுவும்,பெண் பிரண்டை ஒன்று ஒன்றரை அங்குலத்திற்கு ஒரு கணுவாகவும் அமைந்திருக்கும். பிரண்டையை நன்கு வதக்கி புளியுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அரிப்பையும், வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும். முற்றியதாக அல்லாமல் இளந்தண்டை பயன்படுத்தலாம். இதனைப் பறிக்கும்போது கையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பறித்தால் கையில் அரிப்பு உண்டாகாது.
#பொதுக் குணம்.
பிரண்டையைப் பற்றிப் பேசுவதானால் முழுக்க முழுக்க வாய் முதல் ஆசனவாய்முடிய(அதாவது உதடு, வாய்,நாக்கு, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல், ஆசனவாய்) இவைகளில் ஏற்படும் எந்த வியாதியானாலும் குணப்படுத்தக் கூடிய அற்புத மூலிகையாகும்.
திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு, அதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால் பிரண்டை நிச்சயமாக உதவும். பிரண்டையை இடித்து, சாறெடுத்து, அதனுடன் சிறிது புளியும், உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி, பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றுப் போட்டு வர இரண்டொரு நாட்களில் குணமாகும்.
பிரண்டையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் உதவும். எனவே, கால்சியம் குறைவாக இருப்பவர்கள் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.அசீரணம் போகும்.
எலும்பு முறிவுக்கு, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.
இவைகள் யாவரும் அறிந்த முறைகள்.ஆனால் வைத்திய முறையில் பிரண்டையை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி.?
#பிரண்டைப் பற்பம்
பிரண்டையைக் கொண்டுவந்து அதன் கணுக்களை வெட்டி நீக்கி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மூன்று படி பிரண்டை எடுத்துக் கொள்ளவும்.இதோடு சுத்தி செய்து கடல் நீரில் தீட்சை செய்த சோற்றுப்பு ஒரு படி சேர்த்து கல் செக்கில் இட்டு நன்றாக மெழுகு பதத்திற்கு ஆட்டி அடை தட்டி வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.உலர்ந்த பின் அகலில் இட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்த பின் முப்பது வரட்டிகள் வைத்துப் புடமிட வேண்டும்.ஆறிய பின் பிரித்துப் பார்க்க வில்லைகள் வெந்து பற்பமாகி இருக்கும்.இதனைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
#பயன்கள்:
சிறு குழந்தைகளுக்கு அசீரணத்தால் ஏற்படும் பேதி, வயிறு உப்புசத்தினால் வேகமாகப் பீச்சி அடிக்கும பேதி, நுரைத்து பச்சையாக போகும் பேதி, சீதபேதி, தயிர் போல் கட்டி கட்டியாக வாந்தி எடுத்தல்,எது சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் உடனே வாந்தி எடுத்தல் இவைகளுக்கு பிரண்டை பற்பம் அரிசி எடை அளவு பாலில் மூன்று வேளை கொடுத்தால் மேற்படி வியாதிகளை உடனே கண்டிக்கும்.
உஷ்ணபேதி, சீதபேதி இவைகளுக்கு சாதம் வடித்த கஞ்சி,அல்லது மோர் இவைகளில் கொடுக்க உடன் குணமாகும். வயிற்றுப் போக்கிற்கு இதைவிடச் சிறந்த மருந்தில்லை. பெரியவர்களுக்கு வாயில் காணும் புண்,வாய் நாற்றம்,உதடு வெடிப்பு,நாக்கு வெடிப்பு(அச்சரம்) நாக்கு புண், உணவுகுழல் புண், வயிற்றுப் புண், வயிற்றுக் கட்டி (குன்மக் கட்டி) கருப்பைக் கட்டி, கருப்பை புண்,வெள்ளைப்படுதல், மாதவிலக்கு இல்லாத நிலை, மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி, அதிக உதிரம் பேசிறுகுடல்புண்,பெருங்குடல் புண்,ஆசனவாய் அரிப்பு, மலத்துடன் சீழ்,ரத்தம் வருதல்,சதை வளருதல் போன்ற அனைத்து வகையான மூலம் எனப்படும் நோய்கள் போன்றவற்றிக்கு தினம் இரண்டு வேளை 2 முதல் 3 அரிசி எடை அளவு பற்பத்தை வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டுவர யாவும் குணமாகும்.
செரிமான சக்தியைத் தூண்ட
சீரண உறுப்புகளில் நீர் சுரப்பிகளைத் தூண்டி கடினமான பதார்த்தங்களையும் எளிதில் சீரணமாக்க பிரண்டை பற்பம் வேலை செய்கிறது.
சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டை பற்பம் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல் இவைகளில் ஏற்படும் இரணங்கள்,வயிற்றில் ஏற்படும் குன்மக் கட்டிகள்,ஆபரேசன் செய்தாலன்றித் தீராது என கைவிடப்பட்ட கேஸ்கள்,நாள்பட்ட தீராத வயிற்றுவலியால் துன்பப்படுபவர்கள் தொடர்ந்து 40 முதல் 90 நாட்கள் வரை பிரண்டைப் பற்பம் சாப்பிட்டு வந்தால் கத்தியின்றி, ரத்தமின்றியே வயிற்றிலுள்ள எந்தக் கட்டியும், எந்தப் புண்ணும் ஆறும்.நோயும் தீரும்.
நவமூலம் என்று சொல்லப்படும் மூல வியாதிகளை அடியோடு அறுக்க வல்லது.
முதுகு வலி, கழுத்து வலி குணமாக
சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை பற்பத்தைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.
இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டை பற்பத்தை இரு வேளை தேனுடன் சாப்பிட்டு வர இந்த நோய் அடியோடு ஒழியும்.
இதயம் பலப்பட
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. இதற்கு பிரண்டை பற்பத்துடன் நற்பவள பற்பம் சேர்த்து மோருடன் சாப்பிட்டு வர ரத்த நாள அடைப்புக்கள் நீங்கும்.இதயம் பலப்படும்.இரத்த ஓட்டம் சீராகும்.மேலும் இதனுடன் பிரண்டையைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
உடல் பருமன் -: பிரண்டை பற்பத்தை அரை கிராம் அரிசி களைந்த நீரில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
உடல் தேற
பித்த உஷ்ணம் அதன் சம்பந்தமான தேகமுடையவர்களுக்கு சர்வாங்கமும் சூடேறி உருவத்தில் மெலிந்து காணப்படுவார்கள்.இவர்களுக்கு பால் அல்லது வெண்ணை அனுபானத்துடன் சாப்பிட நல்ல உடல் பருமன் ஏற்படும்.
இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவந்தால் தீராத எலும்புருக்கி, ஆஸ்துமா, நுரையீரல் புண்,T.B, இளைப்பு, மதுமேகம், நீரிழிவு போன்றவை மண்டல மருந்திலேயே குணமடையும்.
சூதகவலி - : மூன்று வேளை கால் கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.
பிரண்டை உப்புடன் ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலம், கிராம்பு, முறையாக செய்த லிங்கச் செந்தூரம் இவற்றை கலந்து மாத்திரை செய்து பாலுடன் இரண்டு வேளை சாப்பிட்டு அதனுடன் நரசிம்ம லேகியம் சாப்பிட்டு வர தாது பலப்பட்டு பலவீனம், விந்து நீர்த்தல், விந்து முந்துதல், கைநடுக்கம்,நரம்புத் தளர்ச்சி குணமாகி விந்தணுக்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படும் அளவு கூடி வீரியம் ஏற்படும், உடல் வன்மை பெரும்.இதற்கு முன் பதிவில் குறிப்பிட்ட காஞ்சிரம் மற்றும் ஜீவசக்தி மாத்திரையை விட இம் மருந்து அதிக வீர்யமானது.அது ஆறு மாதத்தில் குணமாக்கும் நோயை இம் மருந்து மூன்று மாதத்தில் குணமாக்கும்.குழந்தை இல்லாதவர்களுக்குக் கொடுத்து குழந்தை பாக்கியம் ஏற்பட்டுள்ளது.
காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம்.மருத்துவரின் மேற்பார்வையில் தான் இதைச் செய்ய வேண்டும்.
பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.
உடம்பின் மேல் தோன்றக் கூடிய சொறி,சிரங்கு, நமைச்சல் முதலியவைகளுக்கு குப்பைமேனியையும், உள்உறுப்புகளில் வாய் முதல் ஆசனம் முடிய ஏற்படும் இரணங்கள், கட்டி, புண் முதலானவைகளுக்கு பிரண்டையையும் நண்பர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரண்டை பற்பம் செய்து வைத்தால் மருந்து தான் கைவசம் இருக்கிறதே என்று அளவுக்கு மீறி எதையும் சாப்பிட்டு விட வேண்டாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா.
Comments
Post a Comment