பயண சாஸ்திரம் :
பயண சாஸ்திரம் :
பயணத்தின் போது நட்சத்திரங்கள் திதிகள் கிழமைகள் இவற்றில் ஏற்படக் கூடிய அமைப்புகளை கொண்டு நல்ல நேரத்தை கணித்து பயணத்தை சரியான திசையில் மேற்கொள்ள அந்த பயணம் வெற்றி அடையும் என முகூர்த்த நூல்கள் சொல்கின்றன.
அவற்றில் ஒன்று யோகினி நிற்கும் நிலையாகும்...
கால விதான பத்ததி/மாலை எனும் நூலில்...யோகினி நிற்கும் நிலையை திதி சூலம் என்ற தலைப்பில் கூறுகிறார்கள்.
பிரதமை -நவமி திதிகளில் ....கிழக்கே சூலம்
த்விதியை - தசமி திதிகளில் ..வடக்கே சூலம்
த்ருதியை- ஏகாதசி திதிகளில்..தென் கிழக்கில் சூலம்
சதுர்த்தி-துவாதசி திதிகளில்..தென் மேற்கில் சூலம்
பஞ்சமி- திரயோதசி திதிகளில்..தெற்கே சூலம்.
சஷ்டி- சதுர்தசி திதிகளில்..மேற்கில் சூலம்
எனவும்...சூலம்உள்ள திசையில் பயணம் செய்வது சுபம்அல்ல ..தீமை ஏற்படலாம் என சொல்லுகிறார்கள்.
இதில் வட கிழக்கு, வட மேற்கு திசைகளுக்கான சூல திதிகள் சொல்லப்படவில்லை..அதாவது சப்தமி அட்டமி அமாவாசை பௌர்ணமி திதிகளுக்கான சூலங்கள் சொல்லப்படவில்லை.
கிழமைகளைகளை கொண்டு சூலம் சொல்வதை போல....திதிகளை கொண்டு யோகினியை நிலையை கூறுகிறோம்...இது சம்பந்தமாக முகூர்த்த சிந்தாமணி என்னும் வட மொழி நூல் கூறுவதை காண்போம்..
திதிகளில் யோகினி நிற்கும் திசைகள்:
நவமி மற்றும் பிரதமை திதிகளில் (9-1)..கிழக்கு திசையிலும்..
திரிதியை மற்றும் ஏகாதசி திதிகளில்(3-11)..தென் கிழக்கு அக்னி திசையிலும்..
பஞ்சமி மற்றும் திரயோதசி திதிகளில்(5-13)..தெற்கு திசையிலும்...
சதுர்த்தி மற்றும் துவாதசி திதிகளில்(4-12) ...தென் மேற்கு நைருதி திசையிலும்..
சஷ்டி மற்றும் சதுர்தசி திதிகளில்(6-14) ...மேற்கு திசையிலும்
சப்தமி மற்றும் பௌர்ணமி திதிகளில்(7-15)..வட மேற்கு ..வாயு திசையிலும்
த்விதியை மற்றும் தசமி திதிகளில்.(2-10) வடக்கு திசையிலும்
அஷ்டமி மற்றும் அமாவாசை திதிகளில் (8-15) வட கிழக்கு ஈசான்ய திசையிலும்
யோகினி நிற்பதாக சொல்லப்படுகிறது.
பயணம் மேற் கொள்ளும் ஒருவர் ...அவர் பயணம் மேற் கொள்ளும் திசைக்கு நேர் எதிராகவும்..அவருக்கு இடது பக்க திசையிலும் யோகினி நிற்க கூடாது என சொல்லப்படுகிறது.
உதாரணமாக பிரதமை அல்லது நவமி திதி இருக்கும் நாளில் ...ஒருவர் கிழக்கு நோக்கி பயணம் செய்யக் கூடாது...அப்போது யோகினி அவருக்கு நேர் எதிரே யோகினி நிற்கும்.
அதேபோல் அஷ்டமி அல்லது அமாவாசை நாளில் கிழக்கு நோக்கி பயணம் செய்யக் கூடாது...ஏனெனில்..அன்று பயணம் செய்பவரின்இடது பக்க திசையான வட கிழக்கில் யோகினி நிற்கும்...
இவ்வாறு முகூர்த்த சிந்தாமணி கூறினாலும்...தமிழ் ஜோதிட்நூலாகிய குமார சாமியம் என்ற நூலில்...யோகினி நிலை...பூமி சுக்கிர நிலை..திதித்தீது அல்லது திதி விஷநிலை என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
ஈரேழு பத்திரண்டு மெட்டுமொன்றொன் பானும்
ஏகதசமூன் றும்பதிமூன் றோடைந்திவ் வீறு
மாறீரேழ் வாயுமுதல் வைத்ததுதொட் டுள்ள
தாந்திசைநேர் மற்றதொன்றொன் றையிரண்டப் படிநேர்
மாறாசை வான்புவிபின் னான்முனெட்டுப் பின்னேழ்
வளர்ந்த்தந்நால் பின்றிரிமுன் னெகதசம்பின் றசநேர்
கூறாசை சாம்மிவை விஷமதுயோ கினிப்பேர்
கூச்சிதன்பின் வலமிடம்பின் கூட்டுதனற் றிதியே.
யோகினி நிலை:
பௌர்ணமி திதியும் சப்தமி திதியும் உள்ள நாட்களில் யோகினி வட மேற்கிலும்
தசமி திதியும் த்விதியை திதிதியும் உள்ள நாட்களில் யோகினி வடக்கிலும்.
அஷ்டமி திதியும் அமாவாசை திதியும் உள்ள நாட்களில் யோகினி வட கிழக்கிலும்
நவமி திதியும் பிரதமை திதியும் உள்ள நாட்களில் யோகினி கிழக்கிலும்
ஏகாதசி திதியும் திரிதியை திதியும் உள்ள நாட்களில் யோகினி தென் கிழக்கிலும்
திரயோதசி திதியும் பஞ்சமி திதியும் உள்ள நாட்களில் யோகினி தெற்கிலும்
துவாதசி திதியும் சதுர்த்தி திதியும் உள்ள நாட்களில் யோகினி மேற்கிலும்
நிற்பதாக குமார சாமியம் கூற்கிறது.
பூமி சுக்கிரன் நிலை.
பிரதமை திதியில்....கிழக்கில்
த்விதியை திதியில்..தென் கிழக்கில்
திரிதியை திதியில்..தெற்கில்
சதுர்த்தி திதியில்..தென் மேற்கில்
பஞ்சமி திதியில்..மேற்கில்
சஷ்டி திதியில் ..வட மேற்கில்
சப்தமி திதியில்..வடக்கில்
அஷ்டமி திதியில்...வட கிழக்கில்
நவமி திதியில் ...ஆகாயத்தில்
தசமி திதியில் ...பூமியில்
பூமி சுக்கிரன் நிலை கொண்டிருப்பதாக கூறுகிறது.
பயணத்துக்கோ ...மற்ற எந்த விஷயத்துக்கோ...முடிவு செய்ய...
யோகினி ஒருவருக்கு பின் பக்க திசையிலும்..வலது் பக்க திசையிலும் இருக்க நல்லது( நேர் எதிர் திசையிலும் இடது பக்க திசையிலும் இருக்க ஆகாது)
பூமி சுக்கிரன் ஒருவருக்கு..பின் பக்க திசையிலும் இடது பக்க திசையிலும்இருக்க நன்மை(நேர் எதிர் திசையிலும் வலது பக்க திசையிலும் இருக்க ஆகாது)
திதித் தீது எனும் திதி விஷ காலம்:
தேய் பிறை சதுர்த்தி திதியில்...முதல் சாமம் ..கிழக்கிலும்
வளர் பிறை அஷ்டமி திதியில் இரண்டாம் சாமம..தென் கிழக்கிலும்
தேய் பிறை சப்தமி திதியில் மூன்றாம் சாமம்..தெற்கிலும்
பௌர்ணமி திதியில் நான்காம் சாமம்...தென் மேற்கிலும்
வளர் பிறை சதுர்த்தி திதி ஐந்தாம் சாமம் ...மேற்கிலும்
தேய்பிறை திரிதியை திதி ஆறாம் சாமம் ..வட மேற்கிலும்
வளர் பிறை ஏகாதசி திதி ஏழாம் சாமம் .....வடக்கிலும்
தேய்பிறை தசமி திதி எட்டாம்சாம ம்...வட கிழக்கிலும்
திதிக்கு விஷநிலை உண்டாம்....
யோகினி நிலை பற்றி சுந்தரானந்தர் ஜோதிடம்எனும் நூல் சொல்லும் விஷயங்களைப் பார்ப்போம்.
வளர் பிறையில் யோகினி நிற்கும் திசைகள்:
பிரதமைக்குக் கிழக்குத்திக் காகும்பாரு பேசுகின்ற துதியைக்கு வடக்கதாகும்
வரமுற்ற திரிதியைக்குத் தென் கிழக்கு மற்ற சதுர்த்திதனக்குத் தென்மேற்காகும்
திரமுற்ற பஞ்சமிக்குத் தென்மேற்காகும் சிறந்த்தொரு சஷ்டிக்கு மேற்கதாகும்
நிறமுற் சப்தமிக்கு வடமேற்காகும் நிட்சயமஷ்டமிக்கிவட கிழக்கதாமே
மற்றதொரு நவமி தனக்க காகசந்தான் வருகின்ற தசமிக்குப் பூமியாகும்
உற்றிடுமே காதசிக்குக் கிழக்கதாகும் ஓங்கு துவாதசி தனக்கு வடக்கேயாகும்
பெற்ற திரயோதசிக்குத் தென்கிழக்காம் பேசு சதுர்தசி தனக்கு தென்மேற்காகும்
முற்று பூரணை தனக்கு தெற்கதாகும் முன்னிலையா யோகினியு மிருப்பாள் பாரே.
தேய் பிறையில் யோகினி நிற்கும் திசைகள்.
நிகரில்லாப் பிரதமைக்கு மேற்காகும் நேர்ந்த்தொரு துதியைக்குவட மேற்கதாகும்
சுகமுற்ற திரிதியைக்கு வட கிழக்காம் சுத்தமாம் சதுர்த்திக்கு ஆகாசமாம்
இகமுற்ற பஞ்சமிக்கு பூமி யாகும் இசைவான சஷ்டிக்கு கிழக்கதாகும்
செகமதனில் சப்தமிக்கு வடக்கதாகும் திரமாம் அஷ்டமிக்கு தென் கிழக்காமே
மிக்கதோர் நவமிக்கு தென் மேற்காகும் வியப்புடைய தசமிக்குத் தெற்குமாகும்
தக்ககேகாதசி தனக்கு மேற்கதாகும் தகுந்த துவாதசி தனக்கு வடமேற்காகும்
பக்க திரயோதசிக்கு வட கிழக்காம் பாங்கு சதுர்தசி தனக்கா கசமாகும்
திக்கில்அமாவாசைக்குப் பூமி தன்னில் றிறமாக யோகினியுமிருப்பாள் பாரே.
வளர் பிறை தேய் பிறை திதிகளில் யோகினி நிற்கும் திசைகள்..
வளர் பிறை. தேய் பிறை
பிரதமை....... கிழக்கு. மேற்கு
த்விதியை... வடக்கு. வட மேற்கு
திரிதியை....... தென் கிழக்கு. வட கிழக்கு
சதுர்த்தி.... தென் மேற்கு. ஆகாயம்
பஞ்சமி.... தெற்கு. பூமி
சஷ்டி.... மேற்கு. கிழக்கு
சப்தமி... வட மேற்கு. வடக்கு
அஷ்டமி... வட கிழக்கு. தென் கிழக்கு
நவமி. ஆகாயம். தென் மேற்கு
தசமி.... பூமி. தெற்கு
ஏகாதசி... கிழக்கு. மேற்கு
துவாதசி.. வடக்கு. வட மேற்கு
திரயோதசி... தென் கிழக்கு. வட கிழக்கு
சதுர்தசி... தென் மேற்கு. ஆகாயம்
பௌர்ணமி... தெற்கு. .......
அமாவாசை.... .......... பூமி
யோகினி நின்ற பலன்....
யாத்திரைக்கு யோகினியு மெதிரேயாகா அத்திசைக்கு யோகினிபின் பக்கத்துற்றால்
நேர்த்தியதாய் நலமாகும் இடது பக்கம் நேர்மையாய் யோகினியு மிருந்திட்டாக்கால்
ஆத்திரமாய்ப் பிரயாணஞ் செல்லலாகும் ஆகாசம் பூமியிலு மிருப்பாளானால்
சாத்திரத்தின் படியாக மத்திமந்தான் சகலத்துக்கும் யோகினியை பார்த்து செய்யே.
யாத்திரை செய்யும் திசைக்கு எதிரே யோகினி நிற்க கூடாது.
பயணம் செய்யும் திசைக்கு பின் பக்கம் யோகினி நிற்க நலமே ஆகும்
பயணம் செய்யும் திசைக்கு இடது பக்க திசையில் யோகினி நிற்க ஆத்திரத்துடன் பயணம் செல்லலாகும் .
ஆகாயத்திலும் பூமியிலும் யோகினி நிற்க மத்திம பலன் என சொல்கிறார்.
சுந்தரானந்தர் ஜோதிடம் யோகினி நிலையையும்.பூமி சுக்கிர நிலையையும் கலந்து குழப்புவதாக தெரிகிறது.
ஆதலால்
பயணம் செய்யும் திசைக்கு நேர் பின்னும் வலப்பக்கமும் யோகினியும்...
பயணம் செய்யும் திசைக்கு நேர் பின்னும் இடப்பக்கமும் பூமி சுக்கிரனும் ..
இருப்பதே நன்மை தரும் என குமார சாமியம் கூறுவதையே கொள்ள வேண்டும்
யோகினி நிற்கும் திசையில்...அதன் கால அளவு
நல்ல மூன்றே முக்கால் கிழக்கயாகும் நலமான யேழரையில் தென் கிழக்காம்
வல்ல பதினொன்றேகால் தெற்கதாகும் மகிழ்வாக பதினைந்தில் தென் மேற்காகும்
சொல்லு பதினெட்டே முக்கால் மேற்கதாகும் சுகமிருபத் திரண்டரையில் வட மேற்காகும்
வெல்லுமிரு பத்தாறே கால்வடக்காம் விரும்பிடமுப் பதுதானும் வட கிழக்கே.
கிழக்கு திசையில்....மூன்றே முக்கால் நாழிகை ...முதல் சாமத்தில்
தென் கிழக்கு திசையில் ...ஏழரை நாழிகையில்...இரண்டாம் சாமத்தில்
தெற்கு திசையில்..பதினொன்றே கால நாழிகையில்...மூன்றாம் சாமத்தில்
தென் மேற்கு திசையில்..பதினைந்து நாழிகைகளி்ல்..நான்காம சாமத்தில்
மேற்கு திசையில்...பதினெட்டே முக்கால் நாழிகையில்..ஐந்தாம் சாமத்தில்
வட மேற்கு திசையில் ..இருபத்திரண்டரை நாழிகையில்..ஆறாம் சாமத்தில்
வடக்கு திசையில் இருபத்தாறே கால் நாழிகையில்...ஏழாம் சாமத்தில்
வட கிழக்கு திசையில் முப்பதாம் நாழிகையில்...எட்டாம் சாமத்தில்
தின யோகினி நிற்கும் கால அளவாக சொல்லப்பட்டுள்ளது.
யோகினியில் பயணம் செய்ய பரிகாரம்.
இருந்ததோர் ஊர்விட்டு பிரயாணங்கள் ஏகுதற்கு யோகினியு மெதிரேயானால்
அறிந்தெந்த திசை போகவேணுமோதான் அத்திசையின் நாழிகையைத் தள்ளி நீயும்
திருந்து தினம் யோகினியும் போன பின்பு சீராக ஊர்ப்பயணம் செல்லலாகும்
பொருந்தவே பரிகார மிதுதானப்பா பூலோக மாந்தருக்காய் சொல்லினேனே.
நாம் பயணம் செய்ய வேண்டிய நாளில்...பயணம் ்செய்யும் திசைக்கு எதிரே யோகினி நிற்குமானால்...அந்த திசையில் ..யோகினி நின்ற கால அளவு போன பின் பயணம் மேற்கொள்வது பரிகாரமாகும்...
Comments
Post a Comment